மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா 8 ஆண்டுகளுக்கு பிறகு போயஸ் கார்டன் வேதா இல்லத்திற்கு எதிரே நிலம் வாங்கி புதிதாக வீடு கட்டி இன்று காலை கிரஹப்பிரவேசம் நடத்தியுள்ளார்.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்திற்கு எதிரே புதிய வீட்டில் குடியேறிய சசிகலா….
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் பற்றி அறியாதவர்கள் யாரும் இல்லை. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகலா அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து கடந்த 2020 ம் வருடம் விடுதலை ஆனார்.
அதன்பின்னர் அவர் அரசியல் சார்ந்த நடவடிக்கைகள் குறைய தொடங்கின. ஆனால் திடீரென 7 ஆண்டுகள் கழித்து அவர் கோடநாடு எஸ்டேட் பங்களாவிற்கு சென்று அங்கு ஜெயலலிதாவின் உருவ சிலையுடன் கூடிய நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். கூடிய விரைவில் ஜெயலிதாவிற்கு சிலை நிறுவப்படும் என்றும் கூறினார்.
தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு எதிரே இடம் வாங்கி புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளார் சசிகலா . இன்று காலை புதிய வீட்டில் கோ பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து கிரஹப்பிரவேசம் நடத்தியுள்ளார். இந்த கிரஹப்ரவேசத்திற்கு சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர்.
அவர் ஏற்கனவே அ.தி.மு.க வில் இருந்த பன்னீர் செல்வம் அவர்களோடு இணைந்து முழுநேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தார். தற்போது சசிகலா போயஸ் கார்டன் இல்லத்தில் குடியேறி இருப்பது அரசியலுக்கான உத்வேகமாக இருக்கும் என்று கூறி வருகின்றனர். ஜெயலலிதா அவர்களின் வேதா இல்லமானது நீதிமன்ற உத்தரவின் படி அவரது அண்ணன் மகள் தீபாவிடம் ஒப்படைக்க பட்டது குறிப்பிடத்தக்கது.