திருமஞ்சனம் என்று நாம் சொல்லக்கூடிய ஆனி உத்திர தரிசனம் 2024 இந்த ஆண்டு வரும் ஜூலை மாதம் 12ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. சிவபெருமானை நாம் எவ்வாறு வழிபடுவது என்பது குறித்த தகவல்களை இந்த பதிவில் நாம் காணலாம். இந்த வழிபாட்டால் நமக்கு கிடைக்கும் பலன் மற்றும் வழிபாடும் முறைகளும் இதில் விளக்கப்பட்டுள்ளது.
ஆனி உத்திர தரிசனம் 2024
நடராஜர்:
சிவபெருமானின் பல்வேறு ரூபங்களில் நடராஜ ரூபம் மிக உயர்ந்ததாக போற்றப்படுகிறது. ஆனி திருமஞ்சனம் என்று சொல்லக்கூடிய ஆனி உத்திர நாளன்று நடராஜ பெருமாளுக்கு நடைபெறும் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நடராஜர் உள்ள அனைத்து சிவன் ஆலயங்களிலும் இந்த அபிஷேகம் நடைபெறும். அதிலும் குறிப்பாக சிதம்பரத்தில் நடைபெறும் இந்த அபிஷேகம் அதிவிசேஷம் வாய்ந்தது.
பலன்கள்:
நடராஜருக்கு ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு அபிஷேகம் நடைபெறும். பொதுவாக நடராஜருக்கு ஆனி திருமஞ்சன அபிஷேகம் செய்வதால் நாட்டில் விவசாயம் செழிக்கும். மழை வளம் பெருகும்.
தனிப்பட்ட பலனாக ஆனி திருமஞ்சன அபிஷேகத்தை கண் கொண்டு பார்ப்பதால் நீண்ட நாட்களாக திருமணம் தள்ளிபோகிறவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணம் ஆன பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும். ஆண்களுக்கு உடல் வலிமை, மன வலிமை பெருகும். வீட்டில் அமைதி நிலவும். கடன் பிரச்சனைகள் தீரும்.
மதுரை காலதேவி அம்மன் கோவில் – கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றும் அதிசயம் !
வழிபடும் முறை:
வீட்டில் சிவ லிங்கம் அல்லது நடராஜர் சிலை வைத்திருப்பவர்கள் கட்டாயம் நித்திய அபிஷேகம் செய்ய வேண்டும். அல்லது பிரதோஷம் தினம் அல்லது சிவபெருமானுக்கு உரிய சிறப்பு வாய்ந்த நாட்களிலாவது அபிஷேகம் செய்ய வேண்டும். அப்படி இந்த ஆனி திருமஞ்சன நாளிலும் உங்கள் வீட்டில் உள்ள சிவலிங்கம் அல்லது நடராஜரை அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
அபிஷேகம் செய்ய பால், தயிர், விபூதி, பஞ்சாமிர்தம் போன்ற பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யலாம். அபிஷேகம் முடிந்தபின் ஸ்வாமிக்கு நெய்வேத்யமாக சக்கரை பொங்கல் அல்லது வெண் பொங்கல் அல்லது பழங்கள் படைத்து தீபாராதனை காட்ட வேண்டும். அதன் பிறகு தேவாரம் பாடல்கள் அல்லது திருவாசக பாடல்கள் பாடல்கள் பாராயணம் செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
உருவ சிலை இல்லாதவர்கள் சிவபெருமான் படத்திற்கு மலர்கள் சாத்தி, நெய்வேத்யம் படைத்து வழிபடலாம். அன்றைய நாளில் கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. கோவிலில் நடக்கும் ஆனி திரு மஞ்சன அபிஷேகத்திற்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி போன்ற தங்களால் இயன்ற அபிஷேக பொருட்களை வாங்கி தரலாம். இது மிக சிறந்த பலன்களை நமக்கு தரும். தீராத கடன் பிரச்சனைகளில் இருப்பவர்கள் பச்சரிசி மாவு அபிஷேக பொருளாக வாங்கி தரலாம். மிக அற்புத பலன்களை நம் வாழ்வில் வழங்கும் இந்த ஆனி திருமஞ்சன நன்னாளை தவறவிடாதீர்கள்.