மருத்துவமனைக்கு செல்லும்போது கடலூரில் ஓடும் பஸ்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மூதாட்டி. அதில் அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவம் நடந்து அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. சக பயணியர்கள் அனைவரும் அந்த மூதாட்டியை வெகுவாக பாராட்டினர். சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கடலூரில் ஓடும் பஸ்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மூதாட்டி
நிறைமாத கர்ப்பிணி:
கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே உள்ள கொரக்கவாடியை சேர்ந்தவர்கள் ராமர் மற்றும் காசியம்மாள் தம்பதியினர். தற்போது காசியம்மாள் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவரை நேற்று காலை மருத்துவ பரிசோதனைக்காக மங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்ல முடிவெடுத்திருக்கார் ராமர். இதற்காக திட்டக்குடியில் இருந்து கொரக்கவாடி வழியாக சென்னை செல்லும் அரசு பேருந்தில் ஏறி மங்களூர் சென்று கொண்டிருந்தனர்.
ஓட்டுனரின் துரித செயல்:
செல்லும் வழியில் சிறுபாக்கம் அருகே கொத்தனுர் பகுதியில் போய் கொண்டிருக்கும் போது காசியம்மாளுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவர் வலியால் அலறி துடித்தார். இதை கண்ட டிரைவர் பேருந்தை உடனடியாக சாலையோரம் நிறுத்தினார். பின்னர் டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரும் பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளையும் கீழே இறக்கினர். மேலும் உடனடியாக அம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
காசாவில் 21 ஆயிரம் குழந்தை மாயம் – வெளியான அதிர்ச்சி தகவல்!
பிரசவம் பார்த்த மூதாட்டி:
இச்சமயத்தில் அதே பஸ்சில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வந்துள்ளார். அவர் வலியால் துடித்த காசியம்மாளுக்கு பிரசவம் பார்த்துள்ளார். இதில் அவருக்கு சுகப்பிரசவம் நடந்து, அழகான ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. பின்னர் அங்கு ஆம்புலன்ஸ் விரைந்து வந்துள்ளது. அதில் காசியம்மாளையும், குழந்தையையும் பாதுகாப்பாக ஏற்றி மங்களூர் அரசு சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதும், துரிதமாக செயல்பட்டு பஸ்சை நிறுத்திய டிரைவர், கண்டக்டர் மற்றும் பிரசவம் பார்த்த மூதாட்டியை பஸ்சில் வந்த சக பயணிகள் வெகுவாக பாராட்டினர். இச்சம்பவம் கடலூர் மாவட்ட மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.