வடகிழக்கு பருவமழை முடிந்து தென்மேற்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் விடாமல் கனமழை பெய்து வருகிறது. வழக்கத்திற்கு மாறாக பெய்து வரும் இந்த கனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் அடுத்த மூன்று மணி நேரத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய கூடும். மேலும் தூத்துக்குடி, கன்னியாகுமரி , நெல்லை, தென்காசி, தேனி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.