நேர கோவில் என்று அழைக்கப்படும் மதுரை காலதேவி அம்மன் கோவில். ஒருவருடைய ஜாதகத்தில் இருக்கும் கிரக தோஷங்கள், நட்சத்திர தோஷங்களை பொறுத்து ஒவ்வொரு ஆலயத்தை வழிபட பரிகாரமாக கூறுவார்கள். ஆனால் இவை அனைத்தும் ஒரே ஆலயத்தில் சென்று வழிபட்டால் நீங்கிவிடும் என்றால், நாம் அந்த ஆலயத்தை நோக்கி செல்வோம் தானே. அப்படியொரு அதிசய கோவில் தான் மதுரை எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள காலதேவி அம்மன் ஆலயம்.
மதுரை காலதேவி அம்மன் கோவில்
ஒருவனின் நேரத்தை விஞ்ஞானத்தால் கணிக்கவே முடியாது.அப்படிப்பட்ட நேரத்திற்காக அமைந்திருப்பது தான் இந்த காலதேவி அம்மன் கோவில்.இந்த கால தேவி அம்மன் சிலையின் பின்பக்கம் திருவாச்சி போல அமைக்கப்பட்டுள்ள கல் அமைப்பில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 நவகிரஹங்கள் ஆகியவற்றின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலின் கோபுரத்தில் “நேரமே உலகம் ” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
இங்கு சூரிய மறைவிற்கு பிறகு நடை திறக்கப்பட்டு சூரிய உதயத்திற்கு முன்பு நடை சாத்தப்படுகிறது. இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக நடை திறந்திருக்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரே கோவில் இந்த உலகத்திலே இது ஒன்று தான் என்கிறார்கள். புராணங்களில் வரும் கால ராத்திரியை தான் இங்கு காலதேவியாக கருதுகிறார்கள்.நேரத்தின் அதிபதியாக விளங்கும் காலதேவியால் ஒருவரின் கெட்ட நேரத்தை கூட நல்ல நேரமாக மாற்றமுடியும் என்பது தான் இந்த காலதேவியின் சிறப்பு.
ஆன்மிக செய்திகள் ஜூன் 2024! முருகனின் வித்யாசமான கோலங்கள் என்ன என்று அறியலாம்!
பௌர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நாட்கள் தான் காலதேவிக்கு உகந்த நாட்களாக சொல்லப்படுகிறது. கோவிலை தலா 11 சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வ லமாகவும் சுற்றி வந்து காலசக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால் போதும். நமது கெட்ட நேரம் அகன்று நல்லநேரம் வரும் என்பது ஐதீகம். அங்குள்ள காலசக்கரத்தின் முன் அமர்ந்து எனக்கு எது நல்லதோ அதை எனக்கு கொடு என்று வேண்டினால் போதும்.
கோவிலுக்கு செல்லும் வழி:
மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம்.சுப்புலாபுரம் மெயின் ரோட்டில் இறங்க வேண்டும். கோவிலுக்கு நடந்தோ அல்லது ஆட்டோவில் தான் செல்ல முடியும்.சாதாரண நாட்களில் செல்வதை விட பௌர்ணமி, அமாவாசை நாட்களில் செல்வதே சிறப்பு.ஏனென்றால் இரவு நேரக்கோவில் என்பதால் போதிய வசதிகள் சாதாரண நாட்களில் கிடைக்காது.
விழாக்காலத்தில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படுகிறது.