மதுரையிலேயே உள்ள பஞ்சபூத தலங்கள். சிவன் கோவில்கள் என்பது இந்து மதத்தின் முக்கிய தெய்வங்களில் ஒன்றான சிவன் கோவில்களைக் கொண்ட இந்து கோவில்கள் ஆகும். இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் 260 க்கும் மேற்பட்ட சிவன் கோயில்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பஞ்ச பூத ஸ்தலம் என்பது நிலம், நீர், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு ஆகிய ஐந்து கூறுகளின் வெளிப்பாடாக உள்ள கோவில்கள் ஆகும். இந்த கோவில்கள் மிகவும் சக்தி வாய்ந்தனவாக கருதப்படுகின்றது.
ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் – காஞ்சிபுரம் (நிலம்)
அருணாசலேஸ்வரர் கோவில் – திருவண்ணாமலை (நெருப்பு)
ஜம்புகேஸ்வரர் கோவில் – திருச்சிராப்பள்ளி (நீர்)
தில்லை நடராஜர் கோவில் – சிதம்பரம் (ஆகாயம்)
ஸ்ரீகாளஹஸ்தி கோவில் – காளஹஸ்தி (காற்று)
ஆகிய கோவில்கள் பஞ்ச ஸ்தல ஆலயங்களாக வழிபட்டு வரப்பட்டுகிறது. அதே போல் மதுரை மாநகரத்தில் பஞ்ச ஸ்தல கோவில்கள் உள்ளன. அந்த கோவில்கள் என்னவென்றும், அதன் சிறப்புகளையும் கீழே காணலாம்.
மதுரையிலேயே உள்ள பஞ்சபூத தலங்கள்
நீர் ஸ்தலம் – செல்லூர் – திருவாப்புடையார் கோவில்.
ஆகாய ஸ்தலம் – சிம்மக்கல் – பழைய சொக்கநாதர் கோவில்.
நில ஸ்தலம் – மேல மாசி வீதி – இம்மையில் நன்மை தருவார் கோவில்.
நெருப்பு ஸ்தலம் – தெற்கு மாசி வீதி – தென் திருவாலவாயர் கோவில்.
காற்று ஸ்தலம் – தெப்பக்குளம் – முக்தீஸ்வரர் கோவில்.
இதுவே மதுரை மாநகரில் உள்ள பஞ்ச ஸ்தலங்கள்.
திருவாப்புடையார் கோவில்:
பஞ்ச பூத தலங்களில் நீர் தலமான திருவாப்புடையார் கோவில் மதுரை செல்லூரில் அமைந்துள்ளது. இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மதுரையில் திருஞானசம்பந்தர் பாடிய 2வது தலம் என்றும், பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட 4வது கோவில் என்றும் இந்த கோவில் போற்றப்படுகிறது.கார்த்திகை மாதத்தில் திருவாப்புடையார் கோவிலில் சிறப்பு பூஜைகளும் விசேஷ வழிபாடுகளும் நடைபெறும். இந்த நாளில் திருவாப்புடையாரை வணங்கினால், சகல செல்வங்களும் வந்துசேரும் என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது.
பழைய சொக்கநாதர் கோவில்:
மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமான சொக்கநாதர் கோவில், செல்வத்தின் அதிபதியான குபேரர், தன் செல்வம் மேன்மேலும் பெருக இங்கு சொக்கநாதரை வழிபட்டு, பிரதிஷ்டை செய்த லிங்கம் தான் இங்குள்ள ஆதிசொக்கநாதர் ஆவார் என்பது காலகாலமாக இருக்கும் நம்பிக்கை. புதன் தோஷம் நீங்க வழிபட வேண்டிய வேண்டிய புதன் ஷேத்திரமாகும். இந்த ஆலய இறைவனை வழிபட்டு வர திருமணத் தடை நீங்குதல், குழைந்தைபேறு கிடைக்கும், வறுமை நீங்கும் என்பது ஐதீகம்.
சிவன் பக்தர்களே.., இந்த 4 நாட்களில் சதுரகிரி சுந்தர – சந்தன மகாலிங்கம் மலைக்கு போகலாம் – வனத்துறையினர் அறிவிப்பு!!
இம்மையில் நன்மை தருவார் கோவில்:
பஞ்ச பூத தலங்களில் நில தலமான இம்மையில் நன்மை தருவார் கோவில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் தென்மேற்கு திசையில் மேலமாசி வீதியில் உள்ளது. பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் இத்தலம், அற்புதங்கள் நிறைந்த தலமாக திகழ்கிறது. இந்த கோவிலில் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றனர். புது கட்டிடம் கட்டத் தொடங்குபவர்கள், சிவன் சன்னிதியில் கைப்பிடி மணலை வைத்து வேண்டி, அதை கட்டிடம் கட்டும் மணலுடன் கலந்து பணியை தொடங்குவது வழக்கம்.
தென் திருவாலவாயர் கோவில்:
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமான தென் திருவாலவாயர் கோவில் மதுரை தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ளது.தெற்கு திசை தலைவனாகிய எமன் வழிபட்ட கோவிலாகும். திருவிளையாடற் புராணக் கதைகளில் ஒன்றான மதுரைக்கு எல்லை கட்டிய படலம் கோவில் இது. இந்த கோவில் மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் கூட குணமடைந்து உடல்நலம் பெறுகிற அதிசயக்கோவில் என்று பக்தர்களால போற்றப்படுகிறது.
முக்தீஸ்வரர் கோவில்:
வாயு – காற்று ஸ்தலமான முக்தீஸ்வரர் கோவில் மதுரை தெப்பக்குளத்தில் இடம்பெற்றுள்ளது.பழைமை வாய்ந்த இந்த கோவிலில் சிவன் ஶ்ரீமுக்தீஸ்வரராகவும் அம்பாள் ஶ்ரீமரகதவல்லியாகவும் காட்சியளிக்கின்றனர். இந்த தலத்தில், 24 நாட்கள் தொடர்ந்து தொடர்ந்து சூர்யன் பூஜை செய்வது சிறப்பம்சமாகும். இங்க வழிபட்டால் கஷ்டங்களுக்கும், தீராத நோய்களுக்கும், பசி , பட்டினி போன்று எல்லா நிலைக்கும் முக்தி வழங்குகிறார் சிவன் என்பது ஐதீகம்.