செருப்பை காணிக்கையாக ஏற்கும் பெருமாள் கோவில் ஒவ்வரு நாளும் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். திருப்பதி செல்ல முடியாதவர்களுக்கு தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கல்யாண வெங்கடரமண பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். இக்கோவிலின் வரலாறு பற்றியும் கோவிலில் வீற்றிருக்கும் பெருமாள் சிறப்புகள் பற்றியும் அறிந்து கொள்வோம்.
செருப்பை காணிக்கையாக ஏற்கும் பெருமாள்
தென் திருப்பதி எங்கிருக்கின்றது :
தமிழகத்தின் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கல்யாண வெங்கடரமண பெருமாள் கோவில் கரூர் மாவட்டத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் தான்தோன்றி மலையில் அமைந்திருக்கின்றது. இக்கோவில் 12ம் நூற்றாண்டை சேர்ந்த கோவில்களில் ஒன்றாக சிறப்பு பெற்றுள்ளது. தமிழகத்தில் இருக்கின்ற குடைவரை கோவில்களில் ஒன்றாக இக்கோவில் இருக்கின்றது.
கோவில் பெயர்க்காரணம் :
பெருமாளின் பக்தராக இருந்தவர் சுசர்மா. இவர் குழந்தை வரம் வேண்டி திருப்பதி செல்வதற்காக காவேரி நதியின் கரையில் தங்கி இருந்துள்ளார். சுசர்மா உறங்கும் நேரத்தில் நாரதர் இவரின் கனவில் தோன்றி ” திருமுக்கூடலூர் ” செல்லுமாறு கூறியுள்ளார். இவரும் நாரதர் கூறிய இடத்திற்கு செல்ல அங்கு வந்த சச்சர்கள் கல் வேலை செய்கின்ற இடத்திற்கு கூட்டிச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த மலையின் மேல் ஒரு பிரகாசமான ஒளி தெரிந்துள்ளது. அங்கிருந்த மலையின் மேல் இருந்த பாறை இரண்டாக பிளந்து பெருமாள் காட்சி அளித்துள்ளார். மலையில் திடீரென்று காட்சி அளித்த பெருமாள் சுசர்மா கேட்ட குழந்தை வரத்தை அவருக்கு அளித்துள்ளார். இம்மலையில் பெருமாள் தானாக தோன்றியதால் “தான்தோன்றி மலை ” என்னும் பெயர் பெற்றது.
தமிழகத்தில் முக்கிய ஆன்மிக சுற்றுலா தலங்கள் !
நடை திறக்கும் நேரம் :
இக்கோவிலில் தினமும் நான்கு கால பூஜைகள் பெருமாளுக்கு செய்யப்படுகின்றது. காலை 6 மணி முதல் 1 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் கோவில் நடை பக்தர்களின் தரிசனத்திற்க்காக திறந்திருக்கும். இக்கோவிலின் அதிசயமாக பெருமாள் மேற்கு திசை நோக்கி அமர்ந்திருப்பார். பெருமாளின் தாயாருக்கு இக்கோவிலில் தனி சன்னதி கிடையாது. பெருமாளின் மார்பில் தயார் வீற்று இருக்கின்றார். பெருமாள் வீற்றிருக்கும் கருவறையில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உடன் ” உற்சவ மூர்த்தியாக காட்சி அளிக்கின்றார்.
சிறப்பு வழிபாடு :
இக்கோவிலில் புரட்டாசி திருவோணம் , மாசி மகம் , தமிழ் வருட பிறப்பு , ஆடி 18 , ரதசப்தமி , திருக்கார்த்திகை , தெலுங்கு வருடப்பிறப்பு , தைபொங்கல் ஆகிய நாட்களில் சுவாமி புறப்பாடு நிகழ்வு நடைபெறும். மேலும் மாசி மகத்தேர் திருவிழா , தெப்ப உற்சவம் மற்றும் புரட்டாசி பிரம்மோற்சவம் இக்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இங்கு நடக்கும் புரட்டாசி சனிக்கிழமை அதிகாலை 3 மணி அபிஷேக ஆராதனையில் ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.
புரட்டாசி பிரம்மோற்சவம் திருவிழா :
தமிழகத்தின் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் இக்கோவிலில் புரட்டாசி மாதம் அமாவாசையின் மறுநாள் புரட்டாசி பிரம்மோற்சவம் திருவிழாவிற்கு கொடி ஏற்றத்துடன் தொடங்கப்படும். மொத்தம் பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முத்து பல்லக்கு , பூ பல்லக்கு போன்ற சிறப்பு பெற்ற வாகனங்களில் பெருமாள் வலம் வருவார். திருவிழாவின் 7வது நாளில் கல்யாண வெங்கடரமண பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும். புரட்டாசி திருவோண தினம் அன்று திருத்தேர் விழா பக்தர்களால் கொண்டாடப்படும். திருவிழாவின் இறுதி நாளில் பல மலர்களைக் கொண்டு புஷ்பயாக அர்ச்சனை பெருமாளுக்கு செய்யப்பட்டு திருவிழா நிறைவு பெறுகின்றது.
எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்
மாசி மகத்தேர் திருவிழா :
மாசி மகத்தேர் திருவிழா ஒவ்வரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறும். மாசி மகத்தேர் தேரோட்டத்தின் மூன்றாவது நாள் தெப்ப உற்சவம் நிகழ்ச்சி நடத்தப்படும்.
செருப்பை காணிக்கை :
12ம் நூற்றாண்டை சேர்ந்த குடைவரை கோவில்களில் ஒன்றாக தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் இருக்கும் பழமை வாய்ந்த கல்யாண வெங்கடரமண பெருமாள் கோவிலில் செருப்பை காணிக்கையாக பக்தர்கள் ” செம்மாலி சர்ப்பணம் ” என்ற பெயரில் வழங்கி வருகின்றனர். ஏன்னென்றால் பெருமாள் செருப்பு தைக்கும் தொழிலாளியின் கனவில் தோன்றி அவரிடம் அளவு சொல்லி செருப்பை செய்து தர சொல்லி கேட்டுள்ளார் எனவே பக்தர்கள் கனவில் பெருமாள் கேட்ட அளவு செருப்பை காணிக்கையாக கொண்டு வந்து தருகின்றனர்.
செருப்பை காணிக்கையாக ஏற்கும் பெருமாள்
நேர்த்திக்கடன் :
உடலில் கை கால் வலியால் கஷ்டப்படும் பக்தர்கள் பெருமாளிடம் வேண்டிக்கொண்டு வலி சரியான உடன் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து ஒரு கல்லில் கை அல்லது கால் வடிவம் வரைந்து கல்லால் அடித்து பக்தர்கள் தங்களில் நேர்த்திக்கடனை பல ஆண்டுகளாய் செய்து வருகின்றனர்.