திருப்பதி மொட்டை: மொட்டை என்று சொன்னவுடன் நமக்கு ஞாபகத்திற்கு வருவது திருப்பதி மற்றும் தமிழ்நாட்டில் பழனி. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தவரும் வாழ்வில் ஒருமுறையேனும் நாம் திருப்பதிக்கு செல்லவேண்டும் என்று ஆசை படுவர். அப்படி திருப்பதிக்கு சென்றால் மொட்டை அடிக்காமல் திரும்ப மாட்டார்கள். திருப்பதியில் பல்வேறு காணிக்கைகள் இருந்தாலும் முடி காணிக்கை செய்வதற்கு பல காரணங்கள் உள்ளன. மேலும் நாம் செலுத்தும் இந்த முடி காணிக்கை எப்படி தோன்றியது? மற்றும் அது பின்னாளில் என்னவாகிறது ? போன்ற பயனுள்ள தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
திருப்பதி மொட்டை
முடிகாணிக்கை எப்படி தோன்றியது?
திருப்பதியில் ஏழு மலைகளாக அஞ்சனாத்ரி, ரிஷபாத்ரி, வெங்கடாத்ரி கருடாத்ரி, நாராயணாத்ரி, நீளாத்ரி, சேஷாத்ரி போன்ற மலைகள் உள்ளன. அதில் உள்ள நீளாத்ரி மலையானது கந்தர்வ இளவரசி நீளாதேவியின் நினைவாக உள்ள மலையாகும். யார் இந்த நீளாதேவி? நீளாதேவி தான் முதன்முதலில் எம்பெருமானுக்கு தனது முடியை வழங்கியவர்.
வைகுண்டத்தில் இருந்த நாராயணன் தனது திருமகளை தேடி திருமலைக்கு வந்தார். அங்கே காலம் காலமாக காத்திருந்தார். அப்போது அவரை சுற்றி பெரும் புற்று ஒன்று உருவானது. புற்றில் இருந்த பெருமாளின் பசியை போக்க பசு ஒன்று பால் சொரிந்தது. நாளடைவில் அந்த பசுவிடமிருந்து பால் குறைவதை கண்ட மாட்டின் உரிமையாளர் அந்த புற்றை கோடரியால் வெட்டினர். அதனால் பெருமாளின் திருமேனியில் காயம் உண்டாகி ரத்தம் வழிய தொடங்கியது. இதனை கண்ட கந்தர்வ இளவரசி நீளாதேவி பெருமாளின் காயத்தில் மருந்திட்டார். இந்த காயத்தால் பெருமாளின் தலையில் முடி நீங்கியிருந்த பகுதியில் தனது கூந்தலை வைத்து அழகு படுத்தினார்.
தன்னுடைய அழகை காக்க தனது அழகை பற்றி கூட கவலை படாமல் நீளாதேவி செய்த இந்த செயல் பெருமாளை அன்பில் மூழ்கடிக்க செய்தது. அதனால் இனி வரும்காலங்களில் எவர் ஒருவர் தனக்கு முடி காணிக்கை செய்து வேண்டுகின்றனரோ அவரின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்று நாராயணன் வாக்களித்தார். தனக்கு காணிக்கையாக வரும் முடி அனைத்தும் நீளாதேவிக்கே அர்ப்பணம் ஆகும் என்று அருளினார். இதனால் தான் திருப்பதியில் செலுத்தும் முடி காணிக்கை மிகவும் முக்கிய நேர்த்திக்கடனாக பார்க்கப்படுகிறது.
தமிழ் புத்தாண்டு 2024 ! சித்திரை மாதத்தின் முதல் நாள் ஏன் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது ?
மனிதனுக்கு முடி தான் அழகு. அதையே நாம் இறைவனுக்கு கொடுப்பதால் நம்முடைய அகந்தை அழிந்து மனதில் உள்ள பாரமெல்லாம் இறங்கி விடுகிறது. ஆன்மீக ரீதியாக மட்டுமில்லாமல் அடிக்கடி முடி இறக்குவது உடல் நலத்திற்கும் நல்லது.
காணிக்கைக்காக செலுத்தும் முடி பின்னாளில் என்னவாகிறது?
திருப்பதியில் ஆண்டுக்கு 500 டன் அளவிற்கு முடி காணிக்கை சேருகிறதாம். இதனை மத்திய அரசு நிறுவனமான எம்.எஸ்.டி.சி லிமிடெட் நிறுவனம் 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்த முடியை இணைய தளம் வழியே ஏலத்திற்கு விடுகிறது. இதன்மூலம் 300 முதல் 400 கோடி வரை கோவிலுக்கு வருவாய் கிடைக்கிறது. இது திருப்பதி கோவிலின் ஒட்டுமொத்த வருமானத்தில் 10 சதவிகிதம் ஆகும். இந்த முடியை பல்வேறு துறைகளில் பயன்படுத்துகின்றனர்.
விக் தயாரிக்க, செயற்கை முடி நடும் தொழில் (Hair Extension), திரவ உரங்கள் தயாரிக்க, மாசு கட்டுப்பட்டு துறைகளில் கூட இந்த முடி பயன்படுகிறது. தரமான ப்ரஸ்கள் தயாரிக்கவும் இவை பயன்படுகின்றன. மேலும் இந்த முடிகளை கொண்டு தரை விரிப்புகள் தயாரிக்கின்றனர். இவை தோட்ட பயிர்களை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கின்றன.